×

ஏற்காடு மலைபாதையில் தனியார் பஸ் கவிழ்ந்து சிறுவன் உள்பட 5 பேர் பலி: 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு அனுமதி

சேலம்: சேலம்- ஏற்காடு மலைப்பாதையில் நேற்று மாலை பஸ் கவிழ்ந்த விபத்தில், சிறுவன் உள்பட 5 பேர் பலியாகினர். விபத்தில் காயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  சேலம் மாவட்டத்தில் ஏற்காட்டில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பஸ் ஒன்று நேற்று மாலை 5.30 மணியளவில், சேலம் நோக்கி புறப்பட்டது. மாலை 6 மணிக்கு இந்த பஸ் 13வது கொண்டை ஊசி வளைவு, முனியப்பன் கோயில் அருகே உள்ள வளைவில் திரும்ப முயன்றது.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், 20 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மலைப்பகுதியில் சரசரவென வேகமாக இறங்கிய பஸ், கீழே 11 வது கொண்டை ஊசி வளைவு வரை வந்து, சாலையில் மோதி நின்றது. இதனால் பஸ்சில் இருந்த 50க்கும் மேற்பட்ட பயணிகள், அலறித்துடித்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகள் தலை, கை, கால் என பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக்கண்ட அவ்வழியாக சென்ற பிற சுற்றுலா பயணிகள், போலீசுக்கு தகவல் அளித்தனர்.

பின்னர் அவர்களே களத்தில் இறங்கி, மீட்புப்பணியில் ஈடுபட்டனர். பின்னர் இடிபாடுகளில் சிக்கிய 50க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இதனிடையே, மலைப்பாதையில் பஸ் உருண்டு வந்ததில், படுகாயமடைந்த 10 வயது சிறுவன் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட, 45 வயது மதிக்கத்தக்க ஒருவரும் வரும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதனால், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. விபத்து குறித்து தகவலறிந்த வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் உயிரிழந்தவர்கள் சேலம் சூரமங்கலம் ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்தி(37), திருச்செங்கோடு கவுண்டம்பாளையம் முனீஸ்வரன்(11), சேலம் கன்னங்குறிச்சி அரிராம்(57) என்பது தெரிய வந்தது. மேலும், 2 ஆண்களின் பெயர் விபரம் தெரிய வில்லை.

The post ஏற்காடு மலைபாதையில் தனியார் பஸ் கவிழ்ந்து சிறுவன் உள்பட 5 பேர் பலி: 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Yercaud ,Salem ,Salem-Yerchadu road ,Salem district ,
× RELATED ஏற்காடு விபத்து: காயம் அடைந்தோருக்கு இபிஎஸ் ஆறுதல்